டெல்லி: இடித்து தள்ளப்பட்ட ரூ.400 கோடி மதிப்பிலான சாராய வியாபாரியின் பண்ணை இல்லம்

தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பான்டியின் பண்ணை இல்லம் ஒன்றை இடிக்கும் பணி நேற்று நடந்தது.

Update: 2024-03-02 15:43 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மிக பெரிய சாராய சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் பான்டி சத்தா என்ற குர்தீப் சிங். கடந்த 2012-ம் ஆண்டில் தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை இல்லம் தொடர்புடைய சொத்து தகராறு ஒன்றில், பான்டி மற்றும் அவருடைய சகோதரர் ஹர்தீப் ஆகிய இருவருக்கு எதிராக அவர்களுடைய கூட்டாளிகள் மோதலில் ஈடுபட்டனர்.

இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை இடித்து தள்ளும் நடவடிக்கையை டெல்லி வளர்ச்சி குழுமம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஜனவரி 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடந்த இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வடகிழக்கு டெல்லியின் கோகுல்புரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட, விருந்து அரங்குகள், ஓட்டல் ஒன்று, குடோன் உள்ளிட்ட 4 ஏக்கர் நில பகுதிகளில் அமைந்த வர்த்தக கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பான்டியின் பண்ணை இல்லம் ஒன்றை இடிக்கும் பணி நேற்று நடந்தது. இதில், 5 ஏக்கர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு பகுதிகள் நேற்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, மீதமுள்ள முக்கிய கட்டிட பகுதியை இடித்து தள்ளும் பணி இன்று நடந்தது. இதனை டெல்லி வளர்ச்சி குழுமம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்