சமூகவலைதளத்தில் வெறுப்புணர்வு கருத்துக்கள் - பல்வேறு நபர்கள் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு
சமூகவலைதளத்தில் வெறுப்புணர்வு கருத்துக்களை பதிவிட்ட பாஜக தலைவர்கள் உள்பட பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,
ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. அதேவேளை, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நுபுர் சர்மா மீது மும்பையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தின்போது அரசியல் கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் என முக்கிய பிரபலங்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டல், அமைதி கட்சியை சேர்ந்த ஷதாப் சௌஹன், பிரபல அரசியல் விமர்சகர் ஷபா நக்வி, மவுலானா முப்தி நதீம், அம்துர் ரஹ்மான் மற்றும் குல்சர் அன்சாரி உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.