டெல்லி பரபரப்பான சாலையில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து காருக்குள் தள்ளிய இளைஞரிடம் போலீசார் விசாரணை

டெல்லி பரபரப்பான சாலையில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து காருக்குள் தள்ளிய இளைஞரை பேடிஎம் செயலி உதவியுடன் போலீசார் பிடித்தனர்.

Update: 2023-03-19 14:50 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் மங்கல்புரி பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் நேற்று இரவு ஒரு இளம்பெண்ணை இளைஞர் தரதரவென இழுத்து காருக்குள் அடைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

பரபரப்பான சாலையில் சிக்னலில் ஒரு இளைஞர் இளம்பெண்ணிடம் அத்துமீறி தாக்கி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளிய நிலையில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தை சிக்னலில் வெறொரு காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சமூகவலைதளத்தில் விவாதமும், அந்த வீடியோவும் வைரலானது.

இது தொடர்பாக தாமாக முன்வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். காரின் எண்ணை கொண்டு காரின் உரிமையாளரான தீபக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபக் காரை லஹ்கன் என்பவருக்கு விற்றுள்ளார். லஹ்கன் காரை வினோத்திற்கு விற்றுள்ளார். வினோத் காரை ஹரிஷூக்கு விற்றுள்ளார். வினோத்திடமிருந்து சைலேந்தர் வாங்கியுள்ளார். சைலேந்திரர் தான் தற்போது அந்த காரை வாடகைக்கு ஓட்டிவருகிறார்.

பின்னர் சைலேந்திரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரோகிணி நகரில் இருந்து விகார்புரி நகருக்கு காரை சிலர் புக் செய்திருந்தனர். ஒரு இளம்பெண்ணும், அவரது இரண்டு ஆண் நண்பர்களும் காரில் பயணித்தனர்.

மங்கல்புரி சிக்னல் பகுதியில் வந்தபோது காரில் இருந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளம்பெண் காரில் இருந்து கீழே இறங்கினார். உடனடியாக, அந்த இளைஞர் இளம்பெண்ணை தாக்கி காருக்குள் தள்ளினார் என்று கார் டிரைவர் கூறினார்.

மேலும், காரில் ஏறிய இளம்பெண்ணும், 2 இளைஞர்களையும் விகாஷ்புரி பகுதியில் இறக்கிவிட்டதாகவும் பயணத்தொகையை பேடிஎம் மூலம் பெற்றதாகவும் கார் டிரைவர் கூறினார். இதையடுத்து பேடிஎம் செயலி மூலமான பண பரிவர்த்தையையடுத்து அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், தீவிர விசாரணைக்கு பின் இளம்பெண்ணும், 2 இளைஞர்களும் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இளம்பெண்ணும் அந்த இளைஞரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இளம்பெண் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருவதும், அந்த இளைஞர் மாவு மில் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இளம்பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் அவருக்கு மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்கினர்.

மேலும், இளம்பெண்ணை தாக்கிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த இளம்பெண் காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்த இளம்பெண்ணை வலுக்காட்டாயமாக தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்