சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரிய அரவிந்த் கெஜ்ரிவால் - முன்மொழிவை நிராகரித்தார் துணை நிலை கவர்னர்
சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு டெல்லி முதல்-மந்திரிஅரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார்.
புதுடெல்லி,
'டெல்லி மாடல்' எனப்படும் டெல்லியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பற்றி சிங்கப்பூர் உலக நகரங்கள் மாநாட்டில் விவரிக்கவும் மேயர் மாநாட்டில் பங்கேற்கவும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதில் பங்கேற்க சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு டெல்லி முதல்-மந்திரிஅரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் தன்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க கோரி கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் தற்போது டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான முன்மொழிவை நிராகரித்து அவருக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
மேயர் மாநாட்டில் அவர் கலந்துகொள்வது ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைக்கும் என கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மேயர்களின் மாநாடு என்பதால் முதல் மந்திரி ஒருவரின் வருகைக்கு அது ஏற்றதாக இருக்காது எனவும் வினய் குமார் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதற்கு கெஜ்ரிவால் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில், " அது மேயர்களுக்கான மாநாடு மட்டும் அல்ல. தலைவர்கள், நிபுணர்களுக்கான மாநாடு. மேலும் சிங்கப்பூர் அரசாங்கம் எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்" என தெரிவித்துள்ளார்.