டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு; 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு
1996-ம் ஆண்டு நடந்த டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
புதுடெல்லி,
டெல்லியில் லஜ்பத் நகர் சந்தை பகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு மே 21-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்டகாலம் நடந்தது.
இதில், தொடர்புடையவர்கள் என 17 பேருக்கு எதிராக டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவர்களில், ஒருவர் உயிரிழந்து விட்டார். 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால், விசாரணையை அவர்கள் எதிர்கொள்ளவில்லை. மீதமுள்ள 9 பேர் விசாரணையை எதிர்கொண்டனர்.
அவர்களில் விசாரணை நீதிமன்றத்தில் 6 பேருக்கு வெவ்வேறு சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டன. முகமது நவ்ஷாத், மிர்சா நிசார் உசைன் மற்றும் முகமது அலி பட் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், குற்றவாளிகளில் 4 பேர் டெல்லி ஐகோர்ட்டில் தனியாக மேல்முறையீடு செய்தனர். இதில், முகமது நவ்ஷாத் மற்றும் ஜாவெல் அகமது கான் ஆகியோரை குற்றவாளிகள் என ஐகோர்ட்டு அறிவித்தது.
எனினும், ஐகோர்ட்டு அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மிர்சா நிசார் உசைன் மற்றும் முகமது அலி பட் ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும்படி வழக்கறிஞர்கள் கேட்டு கொண்டனர். ஆனால், அரிதினும் அரிது என இந்த வழக்கை கூறிய நீதிபதிகள், வழக்கை இறுதி செய்ய மொத்தம் 27 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என சுட்டி காட்டினர்.
அவற்றுடன், குற்றவாளிகளுக்கு சாதகம் வாய்ந்த சூழலை சுட்டி காட்டிய நீதிபதிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கும் கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்தனர்.
எனினும், குற்றத்தின் கடுமையால் ஏற்பட்ட அப்பாவி நபர்களின் மரணம் மற்றும் அதில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்போது, 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளனர்.