டெல்லி; 8 வருடங்களாக போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் சுற்றிய வங்காளதேச நபர் கைது

8 வருடங்களாக போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் சுற்றிய வங்காளதேச நபர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-08-29 11:55 GMT

புது டெல்லி,

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரியாவில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவருடைய பெயர் அனுபம் சவித்ரி என்றும் மராட்டிய மாநிலம் நாக்பூரை பூர்விகமாக கொண்டவர் என்றும் குறிப்பிடபட்டு இருந்தது. ஆனால் அந்த பயணியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய நிஜ பெயர் அனுபம் பருவா. வங்காள தேசத்தின் சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய வங்காள தேச பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கொல்கத்தா வந்துள்ளார். பின் நாக்பூருக்கு சென்று அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜேண்ட் ஜாய் குமார் என்பவரை சந்தித்துள்ளார். முதலில் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த இந்திய முகவரியில் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் எடுத்துள்ளனர். இதனை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டை உருவாக்கியுள்ளனர். இதற்காக ஜாய் குமார் ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளார். இதனை பயன்படுத்தி அவர் சட்டவிரோதமாக பலமுறை வங்காள தேசத்திற்கு சென்று வந்துள்ளார்.

மேலும் 2016-ல் இந்த போலி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தாய்லாந்து நாட்டிற்கு சென்று ஒரு வருடங்கள் கழித்து இந்தியா திரும்பியுள்ளார். பின்னர் தென் கொரியா சென்று அங்கு கட்டிட தொழிலாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் நீண்ட நாட்களாக தங்கியிருந்ததால் தென் கொரியா போலீசாரால் பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்படி வரும் பொழுது தான் இந்த முறை அவர் டெல்லி விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் கையும் களவுமாக சிக்கி உள்ளார். ஏறக்குறைய 8 வருடங்களாக போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் சுற்றி உள்ளார். அவர் மீது காவல் துறையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்