டெல்லி: மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள்
பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் சிங், என்.டி.குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட கடந்த 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி 2-வது முறையாக சிங் மற்றும் என்.டி.குப்தா ஆகியோரையும், சுஷில் குப்தாவுக்கு பதிலாக டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான சுவாதி மல்லிவாலையும் வேட்பாளர்களாக அறிவித்தது.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில், வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.