திருடர்களை பாதுகாத்து விட்டு எங்களை குறை சொல்வதா? - பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே பாய்ச்சல்

திருடர்களை பாதுகாத்து விட்டு எங்களை குறை சொல்லக்கூடாது. ஊழல் எதிர்ப்பு போராளியாக காட்டிக்கொள்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Update: 2023-03-30 03:22 GMT



புதுடெல்லி,


பா.ஜனதா தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிணைந்து இருப்பதாக கூறினார்.

இந்தநிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நரேந்திர மோடிஜி... அதானியின் போலி கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்? நீங்கள் ஊழல்வாதிகளை தப்பிஓட வைக்கும் இயக்கம் நடத்துகிறீர்கள். அதில், லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, ஜதின் ேமத்தா ஆகியோர் உறுப்பினர்கள் அல்லவா? அந்த கூட்டணியின் அமைப்பாளர் நீங்களா?

'ஊழல் எதிர்ப்பு போராளி' என்று உங்களை நீங்களே காட்டிக்கொள்வதை நிறுத்துங்கள். பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்நாடக பா.ஜனதா அரசு, 40 சதவீத கமிஷன் வாங்குவதாக கூறப்படுவது ஏன்? மேகாலயாவில் 'நம்பர் ஒன்' ஊழல் அரசில் பா.ஜனதா பங்கேற்றது ஏன்? ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்கள் ஊழலில் சம்பந்தப்படவில்லையா?

அமலாக்கத்துறை, 95 சதவீத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஏவிவிடப்படுகிறது. ஆனால், சிலர் பா.ஜனதாவில் சேர்ந்தவுடன், அவர்கள் சலவை எந்திரத்தில் துவைத்ததுபோல் தூய்மையாகி விடுகிறார்கள்.

உங்களுக்கு 56 அங்குல மார்பு இருந்தால், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க உத்தரவிடுங்கள். 9 ஆண்டுகளில் முதல்முறையாக வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வங்கிப்பணத்துடன் தப்பி ஓடியவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர் ஊழல்வாதியா? அல்லது நாங்களா? அவர் ஊழல்வாதிகளை ஆதரிக்கிறார்.

அதானியை பற்றி ஏன் பேசவில்லை என்ற நாங்கள் கேட்டால், எங்களை 'ஊழல்வாதிகள்' என்கிறார். பெரிய திருட்டுகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கும் அவர், மற்றவர்களை 'திருடர்கள்' என்கிறார். பிரதமர் மோடி உண்மையை பேச வேண்டும். ஆனால், மற்றவர்களை இழிவுபடுத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்