பட்டாசு கடை விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

பெங்களூரு அருகே மாநில எல்லையில் பட்டாசு கடையில் நடந்த விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2023-10-08 21:19 GMT

பெங்களூரு:-

பட்டாசு கடையில் விபத்து

பெங்களூரு அருகே தமிழக- கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோன் இருந்தது.

நேற்று முன்தினம் மாலை அந்த கடைக்கு பட்டாசுகளை, லாரி மற்றும் பிக்அப் வேன்களில் கொண்டு வந்து இறக்கினர். அப்போது பட்டாசுகளை கடை, குடோன்களுக்கு இறக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடை, குடோனில் இருந்த 13 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களின் உடல்களை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

பலி 14 ஆக உயர்வு

அந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை மேலும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் பட்டாசு கடை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா டி.அம்மாபேட்டையை சேர்ந்த ராமு மகன் பிரகாஷ் (20), முருகன் மகன் வேட்டப்பன் (25), பெரியசாமி மகன் ஆதிகேசவன் (23), தம்பிதுரை மகன் விஜயராகவன் (20), செந்தில் மகன் இளம்பருதி (19), மாது மகன் ஆகாஷ் (23), வேடியப்பன் மகன் கிரி (22), மற்றொரு வேடியப்பன் மகன் சச்சின் என்ற முனிவேல் (22). திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை குமார் என்ற ஏசு என்பவரின் மகன் சந்தோஷ் (24), மேகநாதன் மகன் நித்தீஷ் (26), கள்ளக்குறிச்சி அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் மகன் பிரபாகரன் என்கிற டோனி (19), ஜெய்சங்கர் மகன் அப்பாஸ் (23), பரிகம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வசந்தராஜ்(27), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மரியா லாரன்ஸ் மகன் அந்தோணி பவுல்ராஜ் என்பது தெரிய வந்தது.

7 பேர் படுகாயம்

இறந்த 14 பேரின் உடல்களும் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த விபத்தில் கடை உரிமையாளர் நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் பெங்களூரு மடிவாளா செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையிலும், சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால்கபிர் ஆகிய 4 பேர் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி, கட்டிட உரிமையாளர் அனில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதில் நவீன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதால் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்படுதல், விபத்து மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பட்டாசு கடை, குடோன் உரிமம் தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டு இருந்தன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்