கிரகஜோதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம்-மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கிரகஜோதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக மின்சார துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-01 21:29 GMT

பெங்களூரு:-

மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இலவச மின்சாரம்

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக நாங்கள் அறிவித்தோம். அதில் ஒன்றான வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் கிரகஜோதி திட்ட தொடக்க விழா வருகிற 5-ந் தேதி கலபுரகியில் நடைபெற உள்ளது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்து அமல்படுத்துகிறார். இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பு மந்திரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்கள்.

மாநிலத்தில் 2.16 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில் இதுவரை 1.42 கோடி பேர் இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாத மின் கட்டண ரசீதில் கட்டணம் பூஜ்ஜியம் என்ற தகவலுடன் ரசீது வழங்கப்படும். இந்த இலவச மின்சார திட்டத்தால் மின்துறைக்கு எந்த இழப்பும் இல்லை. மாநில அரசு இந்த திட்டத்திற்கான நிதியை முழுமையாக மின்துறைக்கு மானியமாக வழங்கிவிடும்.

மூன்று திட்டங்கள்

குடிர ஜோதி, பாக்கிய ஜோதி திட்டங்களின் கீழ் வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 40 யூனிட் வரை தற்போது மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இனி அவர்களுக்கு மாதந்தோறும் தலா 53 யூனிட் இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் அவர்கள் 10 சதவீத மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அம்ருத ஜோதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா 75 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

அத்துடன் கூடுதலாக தலா 10 சதவீத மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் இந்த மூன்று திட்டங்களும் கிரகஜோதி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மின்சாரம் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க காலஅவகாசம்

இன்று (நேற்று) முதல் தற்போது வீட்டு இணைப்புதாரர்களுக்கு பூஜ்ஜிய கட்டண ரசீது வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை மாத கட்டணத்தில் சில நாட்களில் கட்டணம் கடந்த மாதம் (ஜூலை) வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த சில நாட்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தப்படும். கடந்த மாதம் 27-ந் தேதிக்குள் விண்ணப்பித்தவா்களுக்கு இலவச மின்சார திட்டத்தின் பயன் கிடைக்கும். இன்னும் விண்ணப்பிக்காதவா்கள், இனியும் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது விண்ணப்பித்தால் அதற்கான பயன் அடுத்த மாதம்(செப்டம்பர்) கிடைக்கும்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்