பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி; தாவூத் கூட்டாளி மும்பையில் கைது
பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி வழங்கியதாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் தம்பி அனீஸ் இப்ராகிம் உள்ளிட்டவர்கள் மீது மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது இந்த வழக்கில் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி பா்வேஷ் சுபேர் வாயித் மேமனுக்கு (வயது47) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து காலாசவுக்கி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு வெர்சோவில் உள்ள வீட்டில் பர்வேஷ் சுபேர் வாயித் மேமனை கைது செய்தனர். மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பல கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க சில காலம் துபாயில் வசித்து வந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.