அனந்த் குமாரை பா.ஜனதா மறந்துவிட்டது மகள் விஜிதா குற்றச்சாட்டு

Update: 2023-03-29 22:58 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சிக்கு இன்று வரை பெயர் இருப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் அனந்த்குமார். இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் எம்.பி.யாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தார். பா.ஜனதாவில் உள்ள செல்வாக்கு மிக்க தலைவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா, மற்றொருவர் விஜிதா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அனந்த் குமார் மரணம் அடைந்தார். இதையடுத்து அவர்கள் குடும்பத்தினரிடம், பா.ஜனதா வைத்திருந்த உறவுகள் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசியலில் இருந்து அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் அனந்த்குமாரின் குடும்பத்தினர் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இதை வெளிக்காட்டும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மகள், விஜிதா பதிவிட்ட டுவிட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவில் அனந்த்குமார் என்று கூறினால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. பா.ஜனதாவிற்காக முழு மூச்சாக உழைத்தவர் எனது தந்தை. பல்வேறு போராட்டங்கள், ரெயில் மறியல்களில் ஈடுபட்டிருக்கிறார். மந்திய மந்திரியாக இருந்தபோது, இருந்த செல்வாக்கு, தந்தை இறந்த பின்னர் இல்லை. 1987-ம் ஆண்டு முதல் எனது தந்தை பா.ஜனதாவிற்காக உழைத்தார். ஆனால் தற்போது அவரது வரலாறு பேசப்படவில்லை. எனது தந்தையை பா.ஜனதா முற்றிலும் மறந்துவிட்டது. இதை தேர்தல் நேரம் என்பதற்காக கூறவில்லை. கட்சிக்காக உழைத்த தந்தையின் பெயரை சாலை அல்லது ரெயில் நிலையத்திற்கு வைக்கலாம். ஆனால் பா.ஜனதா கட்சியினர் ஏன் இதை செய்யவில்லை. இனி வரும் நாட்களிலாவது, தந்தையின் பெயரை சூட்டவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்