புதிய கர்நாடகத்தில் தலித் மக்கள் பொருளாதார பலம் பெற வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

புதிய கர்நாடகத்தில் தலித் மக்கள் பொருளாதார பலம் பெற வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-03-26 21:16 GMT

பெங்களூரு:

முடிவு எடுக்கவில்லை

வீரசைவ-லிங்காயத் பஞ்சமசாலி சமுதாய பவன் திறப்பு விழா ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

இட ஒதுக்கீடு உயர்வு விஷயத்தில் சரியான முறையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதி ஜெயமிருதஞ்சய சுவாமி திடமான முறையில் போராட்டம் நடத்தினார். இதனால் அரசு விழிப்படைந்தது. நாங்கள் சுயமாக சிந்தித்து ஒக்கலிகர்கள், லிங்காயத்துகளுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம். எந்த ஒரு அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கவில்லை. இட ஒதுக்கீடு உயர்வை நாங்கள் தீவிரமாக அமல்படுத்துவோம்.

முன்னேற வேண்டும்

புதிய கர்நாடகத்தில் தலித் மக்கள் பொருளாதார ரீதியாக பலம் பெற வேண்டும். கல்வியாளர்களாக மாறி சுயமரியாதை வாழ்க்கை வாழ வேண்டும். இந்த கனவை நிறைவேற்ற நாங்கள் பின்வாங்க மாட்டோம். தேர்தலுக்காக நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். தலித் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். இதன் மூலம் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.

ஒற்றுமையாக உழைத்து நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். லிங்காயத் சமூகத்தின் கடைசி நிலையில் உள்ள மக்களுக்கும் உரிய நியாயம் கொடுக்கும் பணியை நாங்கள் செய்துள்ளோம். இங்கு அமையும் ஜவுளி பூங்காவால் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அடுத்த 6 மாதத்தில் மேலும் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும். சிறிய சமூகங்களின் மேம்பாட்டிற்கு வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் 11 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவி நிதியாக ரூ.818 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெண் கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்