உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை; உடலை 3 துண்டுகளாக வெட்டிய கொடூரம்

குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2023-11-03 09:05 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா கிராமத்தில் ராஜ்குமார் சுக்லா என்ற நபரின் வீட்டில் வேலை செய்வதற்காக 40 வயது தலித் பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணின் 20 வயது மகள், ராஜ்குமார் சுக்லாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த ஒரு அறையில் இருந்து தனது தாயின் அலறல் சத்தம் கேட்டதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அந்த பெண்ணின் உடல் 3 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரும் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மிகுந்த பயத்துடனும், கோபத்துடனும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்