தட்சிண கன்னடா மாவட்டத்தில்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 29,572 மாணவர்கள் எழுதுகிறார்கள்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 29,572 மாணவர்கள் எழுதுகிறார்கள் கல்வித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மங்களூரு-
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வையொட்டி மாநில அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு அறைக்கு மாணவ-மாணவிகள் வந்து விட வேண்டும். அப்போது தான் மாணவர்களிடையே உள்ள பதற்றம் தணியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட கல்வித்துறை அதிகாரி சுதாகர் கூறுகையில், கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 31-ந்தேதி தொடங்க உள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் 29,572 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையொட்டி 98 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.