எல்லை தாண்டிய பயங்கரவாதம்; பிரதமர் மோடி வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பிரதமர் மோடி வந்த பிறகு எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-04 14:25 GMT

Image Courtesy : PTI

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நமது அண்டை நாடான பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்தது. மோடி அரசு வருவதற்கு முன்பு வரை நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டிருந்தோம். ஆனால் பிரதமர் மோடி வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது.

உரி மற்றும் பாலகோட் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என எந்த ஆபத்து வந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என நாம் நிரூபித்துவிட்டோம்.

வளைகுடா நாடுகள் மற்றும் மேற்க்காசிய நாடுகளில் தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கொரோனா காலத்தில் அங்குள்ள இந்தியர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என முடிவு செய்தது. பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்காவிட்டால், அடுத்த தாக்குதலை எப்படி நம்மால் தடுக்க முடியும்?

எல்லையை தாண்டி இருப்பதால் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என பயங்கரவாதிகள் நினைத்து விடக்கூடாது. பயங்கரவாதிகள் எந்த விதிமுறைக்கும் உட்பட்டு செயல்படுவதில்லை. அவர்களுக்கான பதிலடியும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க முடியாது."

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்