அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு

அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2023-02-18 18:45 GMT

பெங்களூரு:

அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாநில பாடத்திட்டம்

பெங்களூரு நாகவாரா பகுதியில் ஆர்சிட் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி நிர்வாகத்தின் கீழ் பெங்களூருவில் 27 இடங்களில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளி மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

அதாவது சி.பி.எஸ்.சி. அங்கீகாரம் பெற்றதாக மாணவர்களை சேர்த்துவிட்டு, மாநில பாட திட்டங்களை நடத்தி வந்ததாக கூறி அவர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

1,300 தனியார் பள்ளிகள்

விசாரணையில் இந்த நிர்வாகம் சி.பி.எஸ்.சி. என கூறி, பல்வேறு இடங்களில் மாநில பாடத்திட்டத்தை நடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து பள்ளி கல்விதுறைக்கும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கர்நாடகத்தில் ஒட்டுமொத்தமாக 1,300 தனியார் பள்ளிகள் அரசு அனுமதிகளை மீறி செயல்பட்டு வந்தது தெரிந்தது.

கிரிமினல் வழக்கு

அதுகுறித்து பள்ளிகல்வி துறை கூறுகையில், 'கர்நாடகத்தில் 1,316 தனியார் பள்ளிகள் அரசு விதிகளை மீறி செயல்பட்டு வருவது தெரிந்தது.

அதில் 63 பள்ளிகள் அரசிடம் முறையாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அந்த பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 74 பள்ளிகள் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 95 பள்ளிகள் மாநில பாடத்திட்டம் நடத்துவதாக கூறிவிட்டு, பிற பாடத்திட்டங்களை நடத்தி வருகிறது. கன்னட பாடங்கள் நடத்துவதாக கூறிவிட்டு ஆங்கில வழி பாடத்திட்டத்தை 294 பள்ளிகள் நடத்தி வருவது தெரிந்தது. அந்த பள்ளிகள் மீது கர்நாடக கல்வி சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்' என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்