மைசூரு தசரா விழா அழைப்பிதழை உருவாக்குவதில் கவனம் தேவை; விழாக்குழுவினருக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் அறிவுறுத்தல்
மைசூரு தசரா விழா அழைப்பிதழை உருவாக்குவதில் விழாக்குழுவினர் கவனமாக இருக்க வேண்டும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் அறிவுறுத்தி உள்ளார்.
மைசூரு;
மைசூரு தசரா விழா
மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்க்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள். அதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு யானைகள் புடைசூழ ஒரு யானை கம்பீர நடைபோட்டு நடந்து வரும் காட்சியை பார்ப்பதற்காகவே மக்கள் முண்டியடிப்பார்கள்.
இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு தசரா விழா கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் மட்டும் நடந்தது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் இந்த ஆண்டு தசரா விழாவை கோலாகலமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
தசரா துணை கமிட்டி
இந்த ஆண்டு தசரா விழா செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தசரா விழாவை நடத்துவதற்காக தசரா துணை கமிட்டி உறுப்பினர்கள், அதிகாரிகள், செயலாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தசரா துணை கமிட்டி உறுப்பினர்கள், அதிகாரிகள், செயலாளர்களுடன் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தசரா விழா சமயத்தில் எந்தவொரு குழப்பமோ, தொந்தரவோ ஏற்படாதவாறு விழாக்குழுவினர் அனைவரையும் கண்காணிக்க வேண்டும். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனமாக நடத்த வேண்டும் என்று தசரா விழா குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
இளைஞர்கள் தசரா
இந்த முறை தசரா விழாவை நவீன முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தசரா விழாவுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் மின்விளக்கு அலங்காரங்கள், பூக்கள் அலங்காரங்களை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். விழாவுக்கான அழைப்பிதழை சரியான முறையில் கவனித்து உருவாக்க வேண்டும். யாருடைய பெயரும் விடுபட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
கலை நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு கலந்து கொண்ட அதே குழுவினர் அல்லாமல் வேறு பல புதிய கலை குழுக்களை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் தசரா, யோகா தசரா, திரைப்பட விழா, மகளிர் தசரா, மீன்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, இளைஞர்கள் தசரா ஆகியவற்றை மிகவும் ஆடம்பரமாக கொண்டாட இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் கவனிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.