சீனாவில் கொரோனா அதிகரிக்கிறது... ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமே காங்கிரஸ் கவலைபடுகிறது - மத்திய மந்திரி
ஊழல்வாதிகள் சேரவே காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது என்று மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
டெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 108-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைந்துள்ளது.
அதேவேளை, சீனாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கலாம் நாட்டு நலனை கருத்தில் கொண்டு தங்கள் யாத்திரையில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துபடி ராகுல்காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக எவ்வளவு முயற்சித்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை தடுக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஊழல்வாதிகள் சேரவே காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சீனா, கொரியா, ஜப்பானில் கொரோனா அதிகரிக்கிறது... ஆனால், ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமே காங்கிரஸ் கவலைப்படுகிறது. கொரோனா விதிகளை பின்பற்ற நேரம் வந்துவிட்டது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இமாச்சலபிரதேச முதல்-மந்திரியை சந்தித்தாரா? தனிமைப்படுத்திக்கொண்டாரா? அல்லது கொரோனா பரிசோதனை செய்துகொண்டாரா? என்று நான் ராகுல்காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கிறேன் என்றார்.
ஊழல்வாதிகள் சேரவே காங்கிரஸ் இந்த யாத்திரை நடத்துகிறது. குடும்பத்திற்கு எது நல்லது என்பதை விட்டுவிட்டு நாட்டுக்கு எது நல்லது என்பதை காங்கிரஸ் நினைக்க வேண்டும்' என்றார்.