2-வது மனைவி கொலை: தொழிலாளியை விடுவித்து ஐகோர்ட்டு தீர்ப்பு 'திட்டமிட்ட கொலை அல்ல' என கருத்து
2-வது மனைவி கொலை: தொழிலாளியை விடுவித்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு:
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவர் மதுஅருந்திவிட்டு சமையல் செய்யாத காரணத்தால் 2-வது மனைவியை அடித்து கொலை செய்து இருந்தார். இதனால் சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை மூடிகெரே போலீசார் கைது செய்தனர். அவர் மீது சிக்கமகளூரு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு கூறிய சிக்கமகளூரு கோர்ட்டு சுரேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சுரேஷ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ரேகாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்று கூறி இருந்தார்.
அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் சோமசேகர், சிவசங்கரேகவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில்சமையல் செய்யவில்லை என்ற காரணத்தால் மனுதாரர், அவரது மனைவியை அடித்து உள்ளார். இதில் அவர் இறந்து உள்ளார். இதனை திட்டமிட்ட கொலையாக கருத முடியாது. இது ஒரு குற்றமற்ற கொலை. இதனால் மனுதாரர் மீது பதிவான கொலை வழக்கை ரத்து செய்வதுடன், அவருக்கு கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார். அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.