உடல் மீது 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி தூங்கிய அரசியல் பிரமுகர்.. வைரலாகும் புகைப்படம்
பாசுமதாரியை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக யு.பி.பி.எல். தலைவர் கூறினார்.
அசாம் மாநிலம் உடல்கிரி மாவட்டம், பாய்ராகுரி கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவர் பெஞ்சமின் பாசுமதாரி. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இவரது புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த புகைப்படத்தில், இவர் தன் உடல் மீது 500 ரூபாய் நோட்டுக்களை பரப்பி, கட்டிலில் தூங்குவது தெரிகிறது. அவரை சுற்றியும் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிகளவில் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை விமர்சனம் செய்துள்ளனர்.
இவர் போடோலேண்டை தலைமையிடமாக கொண்ட ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யு.பி.பி.எல்.) கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, யு.பி.பி.எல். தலைவரும், போடோலேண்ட் பிராந்திய கவுன்சிலின் (பி.டி.சி.) தலைமை நிர்வாக உறுப்பினருமான பிரமோத் போரோ இன்று விளக்கமளித்தார். பாசுமதாரியை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவருக்கும் கட்சிக்கும் இப்போது தொடர்பு இல்லை என்றும் கூறினார்.
மேலும் போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் அரசாங்கம் அவரை கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரி 10-ம்தேதி நீக்கியது. எனவே, அவரது தனிப்பட்ட செயல்களுக்கு கட்சி எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் பிரமோத் போரோ தெரிவித்தார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடு வழக்கில் பாசுமதாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏழை பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.