3 வளர்ச்சி திட்டங்களுக்காக 800 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி

3 வளர்ச்சி திட்டங்களுக்காக 800 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

Update: 2023-01-23 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் 3 முக்கிய திட்டப்பணிகளுக்காக 800 மரங்களை வெட்டுவதற்கு பெங்களூரு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து வனம் மற்றும் மரங்கள் பாதுகாப்பு கண்காணிப்பாளர் கூறியதாவது:-

பெங்களூருவில் உள்ள யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்த அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகளுக்கு இடையூறாக உள்ள 79 மரங்களில் 33 மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்யவும், மீதமுள்ள மரங்களை வெட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் சார்பில் குந்தூர்- பெல்லந்தூர் இடையேயான 5 கிலோ மீட்டர் தூர சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ள மரங்களில் 82 மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்யவும், 480 மரங்களை வெட்டி அகற்றவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் தூரவனிநகர் மற்றும் கெம்பாப்புரா இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்காக 203 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 43 மரங்கள் வேறு இடங்களில் நடவு செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக யஷ்வந்தபுரம் ரெயில் நிலைய மேம்பாடு உள்பட 3 முக்கிய திட்டப்பணிகளுக்காக பெங்களூருவில் உள்ள 800 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதற்கு பெங்களூரு மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்