மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்: விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை
விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை முனையத்துக்கு அழைத்து செல்ல பஸ்கள் வரவில்லை.
புதுடெல்லி,
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஐதராபாத்தில் இருந்து 186 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11.24 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை முனையத்துக்கு அழைத்து செல்ல பஸ்கள் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், ஒரு கட்டத்துக்கு மேலே நடந்தே முனையத்துக்கு செல்ல தொடங்கினர்.
டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் இவ்வாறு நடந்து செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் அதையும் மீறி பயணிகள் நடந்து சென்றது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது நீண்ட காத்திருப்புக்குப்பின் பஸ்கள் வந்ததாகவும், ஆனால் அதிகாரிகளின் வேண்டுகோளையும் மறுத்து அதற்குள் பயணிகள் நடந்து சென்றதாகவும் தெரிவித்து உள்ளது. எனினும் நடந்து சென்ற பயணிகளையும் ஏற்றிக்கொண்டு பஸ்கள் முனையத்தை அடைந்ததாக கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு சம்பவங்களால் ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கியிருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.