மந்திரி பதவி கிடைக்காததால் சித்தராமையா குறித்து சர்ச்சை பேச்சு

மந்திரி பதவி கிடைக்காததால் சித்தராமையா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான பி.கே.ஹரிபிரசாத்தை நேரில் சந்தித்து டி.கே.சிவக்குமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2023-07-26 18:45 GMT

பெங்களூரு:-

பி.கே.ஹரிபிரசாத் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மேல்-சபை உறுப்பினராகவும் (எம்.எல்.சி.) இருந்து வருபவர் பி.கே.ஹரிபிரசாத். இவர், தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஈடிகா சமுதாய மாநாட்டில் பங்கேற்று பேசிய ஹரிபிரசாத் சித்தராமையாவுக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி இருந்தார்.

அதாவது முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கவும் தெரியும், முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்கவும் தெரியும் என்றும் சித்தராமையா குறித்து ஹரிபிரசாத் பேசி இருந்தார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் தான் கூறியதை திரும்ப பெற மாட்டேன் என்றும் ஹரிபிரசாத் தெரிவித்து இருந்தார்.

டி.கே.சிவக்குமார் சமாதானம்

இந்த நிலையில, பெங்களூருவில் உள்ள ஹரிபிரசாத் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

சென்றார். அவருடன் மந்திரி கே.எச்.முனியப்பாவும் உடன் சென்றிருந்தார். பின்னர் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் ஹரிபிரசாத்தை டி.கே.சிவக்குமார் சமாதானப்படுத்தினார். கட்சியில் உரிய பதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவரிடம் டி.கே.சிவக்குமார் உறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் ஹரிபிரசாத், சித்தராமையா இடையே உண்டான கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் பற்றி மக்களுக்கு தவறான தகவல் சென்று விடக்கூடாது என்பதற்காக, முதல்-மந்திரி சித்தராமையாவையும், ஹரிபிரசாத்தையும் ஒரே மேடையில் அமர வைக்க டி.கே.சிவக்குமார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்