2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி
மைசூருவில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
மைசூரு:
மைசூரு லஷ்கர் மொகல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட செயின்ட் பிலோமினா தேவாலயம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா குல்பால் கிராமத்தைச் சேர்ந்த யங்கண்ணா(வயது 60) என்ற கட்டிட தொழிலாளி வேலை பார்த்து வந்தார். அவர் அங்கேயே கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். நேற்றும் அவர் வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.
அவர் 2-வது மாடியில் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் 2-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி யங்கண்ணா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி லஷ்கர் மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.