120 அடி அகல பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடக்கம்

சிக்கமகளூரு திருவிழாவுக்காக மைதானத்தில் 120 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை கலெக்டர் ரமேஷ் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-10 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு விழா

சிக்கமகளூரு மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சிக்கமகளூரு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக எளிமையான முறையில் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி டவுன் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விழாவுக்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ரமேஷ் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

48 அடி நீளம்

சிக்கமகளூரு திருவிழாவை இந்த ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திருவிழாவின் முன்னோட்டமாக நிகழ்ச்சி நடத்துவதற்கான மேடைகள் தயாராகி வருகிறது. 120 அடி அகலமும், 48 அடி நீளமும் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. அதிகப்படியான கலைஞர்கள் கலந்து கொள்வதால் பெரிய அளவில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

பிரமாண்ட ஏற்பாடு

நிகழ்ச்சியை கண்டுகளிக்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பந்தல்கள் அமைக்கப்படுகிறது. விழா நடைபெறும் இடங்களில் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்படுகிறது. விழாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்த தேசிய அளவிலான கலைஞர்களை வரவழைக்க இருக்கிறோம். அவர்களுக்கான அனைத்து வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவிற்கு வருபவர்களுக்கு முறையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எந்த குறையுமின்றி, நேர்த்தியான முறையில் விழாவை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து செல்வதற்காக கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்