காங்கிரஸ் 70 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சமம் ஆகமாட்டார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

Update: 2023-03-31 06:15 GMT

பெங்களூரு-

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சமம் ஆகமாட்டார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விஜய சங்கல்ப யாத்திரை

எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு நான் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா போன்ற பெரிய தலைவர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகிறார்கள்.

பா.ஜனதா நடத்திய விஜய சங்கல்ப யாத்திரை, பொதுக்கூட்டம், பேரணியில் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதை பாா்த்து காங்கிரஸ் தலைவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் சொந்த தொகுதியில் இருந்து கட்சியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதன்படி எங்கள் கட்சி எம்.பி.க்கள் தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நான் இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை. பா.ஜனதா ஆட்சி அமைக்க நான் தேர்தல் பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும். அதுபோல் அடுத்த தேர்தலிலும் நான் கட்சிக்காக பாடுபடுவேன். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

சமூக நீதி

கர்நாடக வரலாற்றில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டை உயர்த்தி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் கூறினேன். அதே போல் பா.ஜனதா வெற்றி பெற்றது. சுயேச்சை எம்.பி. சுமலதா பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது லம்பாணி வளர்ச்சி வாாியம், தாண்டா மேம்பாட்டு வாரியம் போன்றவற்றை அமைத்தேன். நிலமற்ற தலித் மக்களுக்கு நிலம் வழங்கினேன். பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சமமாகமாட்டார். காங்கிரஸ் தலைவர்கள், தங்களுக்கு முழு பெரும்பான்மை கிடைக்கும் என்று கனவு காண்கிறார்கள். அது பகல் கனவாகவே இருக்கும். அக்கட்சி 70 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்