கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் - சர்வோதயா மாநாட்டில் டி.கே.சிவக்குமார் பேச்சு
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கட்சியின் சர்வோதயா மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
கர்நாடக வரலாற்றில் இன்று (நேற்று) வரலாற்று சிறப்புமிக்க நாள். கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது நமக்கு பெருமை அளிக்கிறது. தொழிலாளியின் மகனாக பிறந்த அவர், டெல்லியில் உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளார். கட்சிக்கு விசுவாசம், நேர்மை, தியாகத்தின் மறுபெயர் மல்லிகார்ஜுன கார்கே.
600 வாக்குறுதிகள்
எவ்வளவு வலி இருந்தாலும் அவர் ஒரு நாளும் ஊடகங்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது இல்லை. அவர் அதிகாரத்தை தேடி போகவில்லை. அவரை தேடி கட்சியின் உயர்ந்த பதவி வந்துள்ளது. அவர் சாதி, மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் இல்லை. கட்சி தலைவர் பதவி தோ்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 90 சதவீதம் பேர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஓட்டு போட்டனர்.
கலபுரகியில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி அமைத்து அதில் தொழிலாளர்களின் குழந்தைகளை மருத்துவம் படிக்க வகை செய்தார். வட கர்நாடகத்திற்கு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுத்தார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது 600 வாக்குறுதிகளை வழங்கினர். அதில் 550 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
காங்கிரஸ் ஆட்சி
பிரதமர் மோடி விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்துவதாக கூறினார். அதன்படி விவசாயிகளின் வருமானம் அதிகரித்ததா?. இந்த ஆட்சியில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும். இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.