கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சார திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு இலவச மின்சார திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
உப்பள்ளி:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் முயற்சி
சான்ட்ரோ ரவி பா.ஜனதா தொண்டர் என்று காங்கிரஸ் சொல்கிறது. அதுகுறித்து ஆய்வு செய்யும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக திவாலாகிவிட்டது. காங்கிரசில் எத்தகையவர்கள் உள்ளனர் என்பது தினேஷ் குண்டுராவுக்கு தெரியும். நான் அவர்களின் அளவுக்கு தரம் தாழ்ந்து பேச மாட்டேன். காங்கிரசார் முதலில் தங்களின் வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஒரு தவறான கலாசாரத்தை கையில் எடுக்கிறது.
காங்கிரஸ் கட்சி வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளது. அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் ஏமாற்றம் அடைந்து இலவச மின்சாரம் குறித்து பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதை அவர்கள் அமல்படுத்த மாட்டார்கள். ஏதாவது செய்து, பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
இலவச மின்சாரம்
இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இலவச மின்சாரம் வழங்குவதாக பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் அவ்வாறு கூறுவது வழக்கம். இப்போது காங்கிரசும் அந்த வழியை பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு 6 மணி நேரம் மின்சாரம் வினியோகம் செய்யவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க காங்கிரசால் எவ்வாறு இலவச மின்சாரம் வழங்க முடியும்?.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.