மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டது; மத்திய மந்திாி பரபரப்பு குற்றச்சாட்டு
பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். நமது நாட்டில் பயங்கரவாதம் உருவாக காரணமாக இருந்ததே காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கி இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். பயங்கரவாதிகள் நமது நாட்டில் காலூன்றுவதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளித்திருந்தது.
பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டு இருந்தது. அப்படிப்பட்ட காங்கிரஸ்கட்சியினர் பயங்கரவாதம் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு தான் வருகிறது.
சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை சித்தராமோற்சவம் என்ற பெயரில் காங்கிரசார் விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். சித்தராமோற்சவத்தால் பா.ஜனதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சித்தராமையா காங்கிரஸ் கட்சிக்கு வந்ததும் முதலில் மல்லிகார்ஜுன கார்வே ஓரங்கட்டினார். அதன்பிறகு, சட்டசபை தோ்தலில் பரமேஸ்வரை தோற்கடிக்க செய்தார். தற்போது சித்தராமையாவின் ஒரே எதிரி டி.கே.சிவக்குமார் தான்.
டி.கே.சிவக்குமாரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காக தான் சித்தராமோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் மோதிக் கொள்வதால் பா.ஜனதாவுக்கு தான் லாபம். அதனால் சித்தராமோற்சவம் கொண்டாடுவதில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.