சிவமொக்கா, மங்களூருவில் காங்கிரசார் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து சிவமொக்கா, மங்களூருவில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2022-06-17 15:25 GMT

மங்களூரு;

நாடு முழுவதும்...

ேநஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 13-ந் தேதி முதல் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அட்டாவர் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் கூறியதாவது:-

ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளும் பா.ஜனதா தான் காரணம். காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. அரசு அலுவலகங்களை மத்திய அரசு தவறான வழியில் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ராஜீவ் காந்தி

இதேபோல் உடுப்பி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அபயசந்திர ஜெயின் கூறுகையில், பா.ஜனதா, சிறுபான்மையினர், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய சமூகங்களைச் சித்திரவதை செய்து, 2014-ல் ஆட்சிக்கு வந்தது.

பாஜகவின் ஊழல் அரசை ஒழிக்க காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கைகோர்க்க வேண்டும். பா.ஜனதாவை அகற்ற சபதம் எடுப்போம். பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கண்டன பேரணி

அசோக்குமார் கொடவூர் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்களை துன்புறுத்த பா.ஜனதா அனைத்து யுக்திகளையும் கையாள்கிறது. ஊழலைத் தடுக்கத் தவறிய பாஜக, நாட்டில் காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறது என்றார்.

இதேபோல் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராகவும், பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து, கைது செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பிரசன்ன குமார் கலந்து கொண்டனர். காங்கிரஸ் போராட்டத்தால் சிவமொக்கா,மங்களூரு, உடுப்பியில் முக்கிய சாலைகள் ஸ்தம்பித்தன.

Tags:    

மேலும் செய்திகள்