குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசாங்கம் ஊக்கமளித்தது - ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்-மந்திரியாக வருவதற்கு முன்பாகவே அம்மாநிலம் பொருளாதார சக்தியாக உருவாகி இருந்தது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-28 15:31 GMT

புதுடெல்லி,

குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்க பாதிப்பின் நினைவாக குஜராத்தின் பூஜ் பகுதியில் ஸ்மிரிதிவன்-2001 நிலநடுக்க நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதன்பின், பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், குஜராத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விடாமல் அதனை தடுப்பதற்கான சதிதிட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், வளம் அடைவதற்கான ஒரு புதிய வழியை குஜராத் தேர்ந்தெடுத்தது என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குஜராத்தை களங்கப்படுத்த சதி நடப்பதாக பிரதமர் கூறுகிறார். அவர் சொல்ல முடியாத உண்மை என்னவென்றால், அவர் முதல்-அமைச்சராக வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, குஜராத் அதன் தொழில் முனைப்பினால் பொருளாதார சக்தியாக உருவெடுத்திருந்தது. காங்கிரஸ் அரசாங்கங்களின் பொதுத்துறை முதலீடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்