ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ராஜஸ்தானில் முதல்-அமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே முதற்கட்டமாக 33 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் தேர்தலில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. 2ம் கட்ட பட்டியலில் 43 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் ராஜஸ்தான் தேர்தலில் இதுவரை காங்கிரஸ் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் காங்கிரஸ் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.