மணிப்பூர் விவகாரம்; மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்ததையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன் கார்கே, மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் நடக்கும் போது சில விவரங்கள் வெளிவரும் என்று நம்புகிறோம். பிரதமர் அவைக்கு வர தயாராக இல்லை. அரசும் எங்கள் பேச்சை கேட்க தயாராக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.