காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி யார் என்பதை தேர்வு செய்ய 3 மேலிட பார்வையாளர்கள் நியமனம்
சித்தராமையா-டி.கே.சிவக்குமாரை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு,
பெங்களூரு, கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.
இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களின் கருத்துகளை கேட்டறிந்து மேலிடத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுஷில் குமார் , தீபக் பவாரியா , பன்வார் ஜித்தேந்திரா ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலிட பார்வையாளர்கள் மூவரும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி யார் என்பது குறித்து சித்தராமையா-டி.கே.சிவக்குமாரை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.