வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் 150 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-02-02 20:06 GMT

பெங்களூரு:-

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் கர்நாடத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட சில கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வந்திருப்பதால், அக்கட்சி தலைவர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளையும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கட்சி தலைமை மனுக்களை பெற்றுள்ளது.

தலைவர்கள் ஆலோசனை

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தலைவர்கள் தொடங்கி உள்ளனர். அதன்படி, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், பிரசாரக்குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்பட தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது 130 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம் என்பதால், அந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்து தலைவர்கள் முதலில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

150 வேட்பாளர்கள் பட்டியல்

அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள், அவர்களுக்கு சிபாரிசு செய்துள்ள தலைவர்கள், அவர்களது பலம், பலவீனம் உள்ளிட்டவை குறித்தும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்போரில் ஒருசிலரை தவிர்த்து விட்டு மற்ற அனைவருக்கும் சீட் கொடுக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதே நேரத்தில் எம்.எல்.சி.க்களாக இருப்பவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பதா?.. வேண்டாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் தலைவர்கள் ஆலோசித்தனர். ஒட்டு மொத்தமாக நேற்று நடந்த கூட்டத்தில் 150 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலை காங்கிரஸ் மேலிட தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைத்து, ஒப்புதல் பெற தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்