காங்கிரஸ் ஜனநாயக கட்சி, சர்வாதிகாரமாக முடிவு எடுக்க முடியாது

புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்பதால் சர்வாதிகாரமாக முடிவு எடுக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

Update: 2023-05-17 18:30 GMT

பெங்களூரு:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சோனியா காந்தி பிரசாரம்

கர்நாடக மாநிலை மக்கள காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர். இதற்காக கர்நாடக மக்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த தேர்தல் கர்நாடகத்தின் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தல் ஆகும். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். சோனியா காந்தியும் பிரசாரம் செய்து எங்களுக்கு வழிகாட்டினார்.

எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மாதம் தீவிரமாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. 14-ந் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. நாங்கள் மேலிட பார்வையாளர்களை பெங்களூருவுக்கு அனுப்பி எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை சேகரித்தோம். காங்கிரஸ் ஜனநாயக கட்சி. இங்கு சர்வாதிகாரமாக செயல்பட்டு முடிவு எடுக்க முடியாது.

2 பேருமே தகுதியானவர்கள்

ஒருமனதாக முடிவு எடுக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். கர்நாடகத்தில் எங்கள் கட்சியில் பெரிய தலைவர்கள் பலர் உள்ளனர். சித்தராமையாவின் அனுபவம், ஆட்சியை சிறப்பாக நடத்திய அனுபவம் அவருக்கு இருக்கிறது. மேலும் அவர் தீவிரமாக சுற்றுப்பயணம செய்து பிரசாரம் மேற்கொண்டார். டி.கே.சிவக்குமார் கட்சியை பலப்படுத்தி, தொண்டர்களுக்கு பலம் கொடுத்தார். அவர் அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்தினார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் காங்கிரசின் பலம். முதல்-மந்திரி பதவிக்கு அவர்கள் 2 பேருமே தகுதியானவர்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் ஆலோசனைகளை மல்லிகார்ஜுன கார்கே பெற்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவையும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாயைும் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒரு துணை முதல்-மந்திரி மட்டுமே உருவாக்கப்படுகிறது.

அரசியல் சாசனம்

அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் டி.கே.சிவக்குமார் நீடிப்பார். இன்று (நேற்று) மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. வருகிற 20-ந் தேதி புதிய முதல்-மந்திரி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சில மந்திரிகளும் அன்றைய தினம் பதவி ஏற்பார்கள். காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி காங்கிரசுக்கானது அல்ல, இது மக்களுக்கான வெற்றி. அரசியல் சாசனம், அதன் மாண்புகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

அரசியல் சாசனத்தை நாசப்படுத்துவோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு பிறகு கர்நாடகத்தில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் மக்களின் குரல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசினர். நாங்கள் கர்நாடக மக்களுக்கு 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதை நாங்கள் உடனே நிறைவேற்றுவோம். வெளிப்படையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

இவ்வாறு கே.சி.வேணு கோபால் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்