சத்தீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடு - அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை

சத்தீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளது.

Update: 2023-02-22 15:15 GMT

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல், இமாச்சல் முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும். அதேநேரம் இந்தாண்டு நடக்கும் 9 மாநில சட்டப் பேரவை தேர்தல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் சட்டப் பேரவை தேர்தல், மக்களவை தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்பதால், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், அதற்கான ஆயத்த பணிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்