மாநிலங்களவையில் பார்வையாளர்கள் கோஷமிட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் - நடவடிக்கை எடுக்க அவைத்தலைவருக்கு கடிதம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அரசியல் கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்தது. இதில் 2-வது நாளான 19-ந்தேதி முதல் புதிய நாடாளுமன்றத்தில் அலுவல்கள் நடந்தன. இந்த அவை நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் இரு அவைகளின் பார்வையாளர் மாடங்களில் அமர்ந்திருந்தனர்.
கடந்த 21-ந்தேதி இவ்வாறு மாநிலங்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த ஏராளமானோர், அவை நடந்து கொண்டிருந்தபோது அரசியல் ரீதியாக கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தலைமை கொறடாவுமான ஜெய்ராம் ரமேஷ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களவையில் கடந்த 21-ந்தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒரு பிரிவினர் அரசியல் கோஷங்களை எழுப்பிய அதிர்ச்சிகரமான சம்பவம், மிகவும் கவலையையும், பெருத்த ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, சபைக்குள் சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநிலங்களவையின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவை பாதுகாவலர்களின் விடாமுயற்சி இருந்தபோதிலும், ஒரு குழுவினர் அரசியல் கோஷங்களில் ஈடுபட்டவாறே இருந்தனர்.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது பார்வையாளர் மாடங்களில் அமரும் தனிநபர்களின் நடத்தைகளுக்கான விதி 264-ஐ அப்பட்டமாக மீறும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. பார்வையாளர் மாடத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பேர் கோஷமிட முடிந்திருப்பது பெரும் கவலையளிக்கும் விஷயம் ஆகும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவைக்குள் இத்தகைய பாதுகாப்பு மற்றும் விதி மீறல் எப்படி சாத்தியமானது? என்பதை கண்டறிய, இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த இடையூறுகளை ஏற்படுத்திய நபர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவங்களுக்கு ஆதரவாக இருந்த எம்.பி.க்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் புனிதத்தை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைப்போல சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியும் இந்த விவகாரத்தில் ஜெக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளது.