கர்நாடக சட்டசபை தேர்தல்: 124 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Update: 2023-03-25 20:37 GMT

பெங்களூரு:

காங்கிரஸ் தீவிர பிரசாரம்

கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மே மாதம் 2-வது வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. அதுபோல் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலையொட்டி பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

தலைவர்கள் ஆலோசனை

இதற்காக கடந்த 17-ந் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையா, பரமேஸ்வர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த பட்டியலுக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்களும் ஒப்புதல் அளித்திருந்தார்கள்.

அதாவது எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாத தொகுதிகளுக்கான 125 வேட்பாளர்களை அறிவிப்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். மேலும் கடந்த 22-ந் தேதி யுகாதி பண்டிகைக்கே சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.

124 வேட்பாளர்கள் பட்டியல்

இந்த நிலையில், 124 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான முகுல் வாஸ்னிக் அதிகாரப்பூர்வமாக நேற்று காலையில் புதுடெல்லியில் வைத்து வெளியிட்டார்.

அந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோலார் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார்.

ஆனால் காங்கிரஸ் மேலிடம் கோலாருக்கு பதில் மைசூரு மாவட்டம் வருணாவில் போட்டியிடும்படி உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட இழுபறிக்கு முடிவு கிடைத்திருக்கிறது.

ராஜாஜிநகரில் புட்டண்ணா போட்டி

இதுபோல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுராவில் போட்டியிட உள்ளார். முன்னாள் துணை முதல்-மந்திரி ஜி.பரமேஸ்வர் கொரட்டகெரே தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பா.ஜனதா மேல்-சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் சேர்ந்த புட்டண்ணா ராஜாஜிநகர் தொகுதியிலும், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சரத் பச்சேகவுடாவுக்கு ஒசக்கோட்டை தொகுதியிலும், சுயேச்சை எம்.எல்.ஏ.வான எச்.நாகேஷ், மகாதேவபுரா தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தந்தை, மகன், மகளுக்கு வாய்ப்பு

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 124 வேட்பாளர்கள் பட்டியலில் தந்தை மற்றும் மகன், தந்தை மற்றும் மகளுக்கு போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, விஜயநகர் தொகுதியில் கிருஷ்ணப்பாவுக்கும், கோவிந்தராஜ்நகர் தொகுதியில் அவரது மகன் பிரியா கிருஷ்ணாவுக்கும் சீட் கிடைத்துள்ளது. இதுபோல், பி.டி.எம். லே-அவுட்டில் காங்கிரஸ் செயல் தலைவரான ராமலிங்க ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவரது மகளான சவுமியா ஜெயநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது தந்தையும், மகளும் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகின்றனர். விஜயநகர் தொகுதியில் கடந்த தேர்தலில் கிருஷ்ணப்பா வெற்றி பெற்றிருந்தார். ஆனால் கோவிந்தராஜ்நகர் தொகுதியில் மந்திரி சோமண்ணாவிடம் பிரியா கிருஷ்ணா தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலார் தங்கவயல் தொகுதியில் ரூபாகலா சசிதரும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தொகுதியில் அவரது தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான எச்.கே.முனியப்பா போட்டியிடுகிறார். இவர் கோலார் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானவர் ஆவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளரிடம் தோல்வி தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மறைந்த முன்னாள் மந்திரி துருவ நாராயணின் மகன் தர்ஷன் நஞ்சன்கூடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தாவணகெரே(தெற்கு) தொகுதி வேட்பாளர் சாமனூர் சிவசங்கரப்பாவும், தாவணகெரே(வடக்கு) தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனும் தந்தை-மகன் ஆவார்கள்.

92 வயதில் போட்டியிடும் மூத்த தலைவர்

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் பெரும்பாலானோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 92 வயதாகும் சாமனூர் சிவசங்கரப்பாவுக்கும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பில் அதிக வயதுடன் போட்டியிடுபவர் சாமனூர் சிவசங்கரப்பா ஆவார்.

காங்கிரஸ் கட்சியின் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலின் விவரம் பின்வருமாறு:-

1 சிக்கோடி சாதல்கா - கணேஷ் ஹூக்கேரி

2 காகவாட்  - பார்ம்கவுட் அலகவுடா காகே

3 குடச்சி (எஸ்.சி.) - மகேந்திரா கே.தம்மண்ணவர்

4 ஹூக்கேரி  - ஏ.பி.பட்டீல்

5 யமகனமரடி(எஸ்.டி.)  - சதீஸ் ஜார்கிகோளி

6 பெலகாவி (புறநகர்) - லட்சுமி ஹெப்பால்கர்

7 கானாப்பூர் - அஞ்சலி நிம்பால்கர்

8 பைலஓங்கலா - மகாந்தேஷ் சிவானந்த கவுஜலகி

9 ராமதுர்கா - அசோக் எம்.பதான்

10 ஜமகண்டி  - ஆனந்த் சித்து நியாமகவுடா

11 உனகுந்த்  - விஜயானந்த எஸ்.காசப்பன்னவர்

12 முத்தேபிகால்  - அப்பாஜி என்ற நாடகவுடா

13 பசவனபாகேவாடி  - சிவனாந்த பட்டீல்

14 பபலேஷ்வர்  - எம்.பி.பட்டீல்

15 இண்டி  - யஷ்வந்த் ராயகவுடா பட்டீல்

16 ஜேவர்கி  - அஜய் தரம்சிங்

17 சோராப்பூர் (எஸ்.டி.)  - ராஜா வெங்கடப்பா நாயக்

18 சாகாப்பூர் - சரணபசப்பா கவுடா

19 சித்தாப்பூர் (எஸ்.சி.)  - பிரியங்க் கார்கே

20 சேடம்  - சரணபிரகாஷ் பட்டீல்

21 சிஞ்சோலி (எஸ்.சி.)  - சுபாஷ் வி.ராத்தோடு

22 கலபுரகி (வடக்கு)  - கனீஷ் பாத்திமா

23 ஆலந்தா  - பி.ஆர்.பட்டீல்

24 உம்னாபாத்  - ராஜசேகர் பி.பட்டீல்

25 பீதர் (தெற்கு)  - அசோக் கேனி

26 பீதர்  - ரகீம் கான்

27 பால்கி  - ஈஸ்வர் கன்ட்ரே

28 ராய்ச்சூர் புறநகர் (எஸ்.டி.)  - பசவனகவுடா தத்தால்

29 மஸ்கி (எஸ்.டி.) - பசனகவுடா துருவிகால்

30 குஸ்டகி  - அமரேகவுடா பட்டீல் பையாப்பூர்

31 கனககிரி - (எஸ்.சி) சிவராஜ் சங்கப்பா தங்கடகி

32 எலபுர்கா - பசவராஜ் ராயரெட்டி

33 கொப்பல்  - கே.ராகவேந்திரா

34 கதக் - எச்.கே.பட்டீல்

35 ரோணா  - ஜி.எஸ்.பட்டீல்

36 உப்பள்ளி-தார்வார் கிழக்கு (எஸ்.சி.) - பிரசாத் அப்பய்யா

37 ஹலியால்  - ஆர்.வி.தேஷ்பாண்டே

38 கார்வார்  - சதீஸ் கிருஷ்ணா சைல்

39 பட்கல் - மன்கல் சுப்பா வித்யா

40 ஹங்கல் - சீனிவாஸ் வி.மானே

41 ஹாவேரி (எஸ்.சி.) - ருத்ரப்பா லமானி

42 பேடகி  - பசவராஜ் என்.சிவன்னன்னவர்

43 ஹிரேகெரூர் - யூ.பி.பனகர்

44 ராணி பென்னூர் - பிரகாஷ் கே.கோலிவாட்

45 ஹடஹள்ளி (எஸ்.சி.) - பி.டி.பரமேஸ்வர் நாயக்

46 அகரி பொம்மனஹள்ளி (எஸ்.சி.) - பீமாநாயக்

47 விஜயநகர்  - எச்.ஆர்.கவியப்பா

48 கம்பிளி (எஸ்.டி.) - ஜே.என்.கணேஷ்

49 பல்லாரி (எஸ்.டி.) - நாகேந்திரா

50 சண்டூர் (எஸ்.டி.)  - துக்காராம்

51 செல்லக்கெரே (எஸ்.டி.) - டி.ரகுமூர்த்தி

52 ஹிரியூர்  - டி.சுதாகர்

53 ஒசதுர்கா  - கோவிந்தப்பா

54 தாவணகெரே (வடக்கு)  - எஸ்.எஸ். மல்லிகார்ஜுன்

55 தாவணகெரே (தெற்கு)  - சாமனூர் சிவசங்கரப்பா

56 மாயகொண்டா (எஸ்.சி)  - கே.எஸ்.பசவராஜு

57 பத்ராவதி  - சங்கமேஷ்வர்

58 சொரப்  - எஸ்.மது பங்காரப்பா

59 சாகர்  - கோபாலகிருஷ்ணா பேளூர்

60 பைந்தூர்  - கே.கோபால் பூஜாரி

61 குந்தாப்புரா  - தினேஷ் ஹெக்டே

62 காபு  - வினயகுமார் சொரகே

63 சிருங்கேரி  - ராஜேகவுடா

64 சிக்கநாயக்கனஹள்ளி  - கிரண்குமார்

65 திப்தூர்  - சடாக்ஷரி

66 துருவகெரே  - காந்தராஜ்

67 குனிகல்  - எச்.டி.ரங்கநாத்

68 கொரட்டகெரே (எஸ்.சி.)  - பரமேஸ்வர்

69 சிரா  - டி.பி.ஜெயச்சந்திரா

70 பாவகடா (எஸ்.சி.) -  எச்.வி.வெங்கடேஷ்

71 மதுகிரி  - கே.என்.ராஜண்ணா

72 கவுரிபித்தனூர்  - சிவசங்கர் ரெட்டி எச்.என்.

73 பாகேபள்ளி  - சுப்பா ரெட்டி

74 சிந்தாமணி  - எம்.சி.சுதாகர்

75 சீனிவாசப்பூர்  - கே.ஆர்.ரமேஷ் குமார்

76 கோலார் தங்கவயல் (எஸ்.சி.) -  ரூபா கலா சசிதர்

77 பங்காருப்பேட்டை (எஸ்.சி.) - எஸ்.என்.நாராயணசாமி

78 மாலூர்  - கே.ஒய்.நஞ்சேகவுடா

79 பேடராயனபுரா - கிருஷ்ண பைரேகவுடா

80 ராஜராஜேசுவரிநகர்  - குசுமா.எச்

81 மல்லேசுவரம்  - அனூப் அய்யங்கார்

82 ஹெப்பால்  - சுரேஷ்.பி.எஸ்.

83 சர்வக்ஞநகர்  - கே.ஜே.ஜார்ஜ்

84 சிவாஜிநகர்  - ரிஸ்வான் ஹர்ஷத்

85 சாந்திநகர்  - என்.ஏ.ஹாரீஸ்

86 காந்திநகர்  - தினேஷ் குண்டுராவ்

87 ராஜாஜிநகர்  - புட்டண்ணா

88 கோவிந்தராஜ்நகர்  - பிரியா கிருஷ்ணா

89 விஜயநகர்  - கிருஷ்ணப்பா

90 சாம்ராஜ்பேட்டை  - ஜமீர் அகமதுகான்

91 பசவனகுடி  - யூ.பி.வெங்கடேஷ்

92 பி.டி.எம். லே-அவுட் - ராமலிங்க ரெட்டி

93 ஜெயநகர்  - சவுமியா

94 மகாதேவபுரா (எஸ்.சி.)  - நாகேஸ்

95 ஆனேக்கல் (எஸ்.சி.)  - சிவண்ணா

96 ஒசக்கோட்டை  - சரத் பச்சேகவுடா

97 தேவனஹள்ளி (எஸ்.சி.)  - கே.எச்.முனியப்பா

98 தொட்டபள்ளாப்புரா  - வெங்கடராமய்யா

99 நெலமங்களா (எஸ்.சி.)  - சீனிவாசய்யா.என்.

100 மாகடி  - பாலகிருஷ்ணா

101 ராமநகர்  - இக்பால் உசேன்

102 கனகபுரா  - டி.கே.சிவக்குமார்

103 மலவள்ளி (எஸ்.சி.)  - பி.எம்.நாராயணசாமி

104 ஸ்ரீரங்கப்பட்டணா  - ரமேஷ் பண்டிசித்தேகவுடா

105 நாகமங்களா  - செலுவராயசாமி

106 ஒலேநரசிப்புரா  - ஸ்ரேயஷ் எம்.பட்டீல்

107 சக்லேஷ்புரா (எஸ்.சி) முரளி மோகன்

108 பெல்தங்கடி  - ரக்சித் சிவராம்

109 மூடுபித்ரி  - மிதுன் எம்.ராய்

110 மங்களூரு  - யு.டி.காதர்

111 பண்ட்வால்  - ரமாநாத் ராய்

112 சுள்ளியா (எஸ்.சி.)  - கிருஷ்ணப்பா.ஜி

113 விராஜ்பேட்டை  - ஏ.எஸ். பொன்னண்ணா

114 பிரியப்பட்டணா  - கே.வெங்கடேஷ்

115 கிருஷ்ணராஜநகர்  - டி.ரவிசங்கர்

116 உன்சூர்  - எச்.பி.மஞ்சுநாத்

117 எச்.டி.கோட்டை (எஸ்.டி.)  - அனில்குமார்

118 நஞ்சன்கூடு (எஸ்.சி.)  - தர்ஷன் துருவ நாராயண்

119 நரசிம்மராஜா  - தன்வீர் சேட்

120 வருணா  - சித்தராமையா

121 டி.நரசிப்புரா (எஸ்.சி.)  - எச்.சி.மகாதேவப்பா

122 ஹனூர்  - ஆர்.நரேந்திரா

123 சாம்ராஜ்நகர்  - சி.புட்டரங்க ஷெட்டி

124 குண்டலுபேட்டை  - எச்.எம்.கணேஷ் பிரசாத்

Tags:    

மேலும் செய்திகள்