2-வது நாளாக தர்பார் நடத்தினார் அரண்மனை பணியாளர்களுக்கு தானம் வழங்கிய மன்னர் யதுவீர்

2-வது நாளாக மைசூரு அரண்மனையில் தனியார் தர்பார் நடத்திய மன்னர் யதுவீர், அரண்மனை பணியாளர்களுக்கு தானம் வழங்கினார். பின்னர் பன்னிமரத்திற்கும் பூஜை செய்தார்.

Update: 2022-09-27 18:45 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழா

சரித்திர புகழ் பெற்ற மைசூரு தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தசரா விழா நாட்களில் மைசூரு அரண்மனையில் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் தசரா விழா தொடங்கிய முதல்நாளில் மைசூரு அரண்மனையில் மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்.

அதுபோல் நேற்று அவர் அரண்மனையில் மன்னர்களின் பாரம்பரியப்படி பல்வேறு பூஜைகள் செய்தார். தேவதைகள், அக்னி, வாயு, வருண பூமி, கங்கை உள்பட ஏராளமான பூஜைகளை செய்து வழிபட்டார்.

தனியார் தர்பார்

\பின்னர் அவர் கணபதி பூஜை, சண்டி பூஜை மற்றும் சாமுண்டீஸ்வரி பூஜை போன்றவற்றை மேற்கொண்டு வழிபட்டார். அதையடுத்து சிம்மாசனத்திற்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து மன்னர் யதுவீர் ராஜ உடையில் கம்பீர நடைபோட்டு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். பின்னர் 2-வது நாளாக தனியார் தர்பார் நடத்தினார். இந்த தர்பார் அரைமணி நேரம் நடந்தது. அதுபோல் மாலையும் அரை மணி நேரம் தர்பார் நடத்தினார்.

மன்னர் யதுவீர் ராஜ உடையில் சிம்மாசனம் நோக்கி வந்தபோது புலவர்கள் உள்ளிட்டோரால் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் ராஜகுரு உள்பட பல்வேறு புரோகிதர்கள் பூஜை நடத்தி வழிபட்டனர். சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர் தனம், தானியம், கனகா, வஸ்திரம் உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்கள் மற்றும் அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு மன்னர் தானமாக வழங்கினார்.

பிரமோதா தேவியிடம் ஆசி பெற்றார்

முன்னதாக சிம்மாசனத்தில் ஏறி அதன் மீது நின்று தர்பாரில் கலந்து பங்கேற்று இருந்தவர்களை நோக்கி மன்னர் யதுவீர் 'சல்யூட்' அடித்தார். மாலையில் மன்னர் யதுவீர் ராஜ உடையில் பட்டத்து யானை மற்றும் பிற யானைகளுக்கும், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுக்கும் பூஜை செலுத்தினார். அதையடுத்து அவர் பல்லக்கில் ஊர்வலமாக அரண்மனை எதிரில் உள்ள புவனேஸ்வரி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மன்னர் யதுவீர் பன்னிமரத்திற்கு பூஜை செய்தார். மன்னர் யதுவீர் காலையிலும், மாலையிலும் சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவதற்கு முன்பு மகாராணி பிரமோதா தேவியிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பாத பூஜை

அதுபோல் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்ததும் மன்னருக்கு அவரது மனைவி திரிஷிகா குமாரி, பாத பூஜை செய்தார். இந்த நிகழ்வு 9 நாட்கள் நடைபெறும் என்றும், கடைசி 3 நாட்களில் லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவையும் நடக்கும் என்று அரண்மனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்