மத்திய அரசின் தாமதத்தால் நீதித்துறை பணிகள் முடக்கம் - சுப்ரீம் கோர்ட்டு குற்றச்சாட்டு
கொலீஜியம் சிபாரிசுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதால் நீதித்துறை பணிகள் முடங்கி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டியது.
புதுடெல்லி,
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பணியிடங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பு சிபாரிசு செய்பவர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. சிபாரிசு செய்தவர்களை நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும் வற்புறுத்திய 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை பின்பற்றாமல், 'கொலீஜியம்' சிபாரிசுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு வேண்டுமென்றே தாமதம் செய்வதாக பெங்களூரு வக்கீல்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, இந்த பிரச்சினை குறித்து செயலாளர் மட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும், மீண்டும் விவாதித்து விட்டு வருவதாகவும் கூறினார்.
அதற்கு நீதிபதிகள் அவரை பார்த்து கூறியதாவது:-
கள நிலவரம் என்னவென்றால், கொலீஜியம் வற்புறுத்திய பெயர்களுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு எப்படி நீதித்துறை இயங்கும்? இதுதொடர்பான எங்கள் வேதனையை ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
பணிமுதிர்வு பாதிப்பு
கடந்த 2015-ம் ஆண்டு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால், மீண்டும் கொலீஜியம் முறை அமலுக்கு வந்தது. அதனால், மத்திய அரசு அதிருப்தி அடைந்தது போல் தோன்றுகிறது. ஆனால், காலதாமதம் செய்வதற்கு அது ஒரு காரணமாக இருக்கக்கூடாது.
கொலீஜியம், பணி முதிர்வு அடிப்படையில் நீதிபதிகளை சிபாரிசு செய்கிறது. ஆனால் மத்திய அரசு, கொலீஜியம் சிபாரிசு செய்த நபர்களில் ஒருவருக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கிறது. இதனால், பணிமுதிர்வு முழுமையாக அடிபடுகிறது.
எல்லை மீறி செல்கிறது
கொலீஜியம் சிபாரிசு செய்து விட்டால், அந்த அத்தியாயம் முடிந்ததாக கருத வேண்டும். அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு, நீதித்துறை பணிகளை தடுக்கக்கூடாது. ஒன்றரை ஆண்டாக சில பெயர்கள் நிலுவையில் உள்ளன. இதனால், சிபாரிசு செய்யப்பட்ட சில வக்கீல்கள், தங்கள் சம்மதத்தை விலக்கிக் கொண்டு விட்டனர். கடந்த 2 மாதங்களாக நீதித்துறை பணிகள் அனைத்தும் முடங்கி விட்டன.
இதுபோன்று கிடப்பில் போட்டு, மத்திய அரசு எல்லை மீறி செல்கிறது. மேலிடத்தில் இருப்பவர்கள், தாங்கள் நினைப்பதை செய்வோம் என்று நினைத்தால், நாங்களும் நாங்கள் நினைப்பதை செய்வோம். நீதித்துறை தனது பங்குக்கு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்.
சட்டத்தை பின்பற்றுங்கள்
சட்டங்கள் இருக்கும்வரை அவற்றை பின்பற்றியே ஆக வேண்டும். இங்கு அட்டார்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் வந்து இருக்கிறார்கள். அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும்.
ஒப்புதல் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த காலக்கெடுவை பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.