கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2023-01-14 20:04 GMT

ஹாசன்:-

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா ஹொல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகன் சந்துரு(வயது 17). இவர் ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று இவர் ஆலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக சந்துருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்துரு படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹாசனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்துரு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய பெற்றோர் முன்வந்தனர். அதன்பேரில் அவரது கண்கள், இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து அவை தேவைப்படுவோருக்கு பொருத்தினர். விபத்தில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்