கோக்கைன் போதைப்பொருள் இந்தியாவிற்குள் வரத்தொடங்கியுள்ளது - அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வரத் தொடங்கியுள்ளது என்று நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை செய்துள்ளார்.

Update: 2022-12-05 15:34 GMT

புதுடெல்லி,

கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வரத் தொடங்கியுள்ளன. நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை பெருமளவில் கடத்தும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அமலாக்க முகமைகள் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இன்று டெல்லியில் நடைபெற்ற வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டிஆர்ஐ) 65-வது நிறுவன தின விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

கடத்தல்காரர்கள் உங்களை விட புத்திசாலிகள் அல்ல என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்குகள் ஒவ்வொன்றும், ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வர வேண்டும். கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். கடினமாக உழைத்து, போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஜி-20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு போன்ற நிறுவனங்கள் எந்த வகையான வேலையைச் செய்கின்றன என்பதையும், கடத்தலைத் தடுக்க அது எவ்வாறு நமக்கு உதவும் என்பதையும் அறிய, உலகளாவிய சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் ஆண்டு வாரியான ஒப்பீடு, இந்தியாவில் போதைப்பொருட்கள் பறிமுதல் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

2021-22 ஆம் ஆண்டில், கோகையின் பறிமுதல் 8.667 கிலோவிலிருந்து 3,479 சதவீதம் அதிகரித்து 310.21 கிலோவாக அதிகரித்துள்ளது. மெத்தாம்பேட்டமைன் 1,281 சதவீதம் அதிகரித்து 884.69 கிலோவாகவும் ஹெராயின் 1,588 சதவீதம் அதிகரித்து 3,410.71 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் மராட்டியத்தில் அதிகபட்சமாக கஞ்சாவை கைப்பற்றியதாகவும் 2021-22 நிதியாண்டில் என்டிபிஎஸ் சட்டம், 1985-ன் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக சுமார் 131 பேரை கைது செய்துள்ளதாகவும் டிஆர்ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்