உ.பி.யில் விளம்பர படங்களில் இருந்த முதல் மந்திரி யோகியின் படங்கள் மட்டும் சேதம்! மர்ம நபர்களை வலைவீசி தேடி வரும் போலீசார்

விளம்பர படங்களில் இருந்த முதல் மந்திரியின் படங்களை சேதப்படுத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-13 09:05 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல விளம்பர பதாகைகள் அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்தன.

அந்த விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் சில மர்ம நபர்கள் விளம்பர படங்களில் இருந்த முதல் மந்திரியின் படங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் சூழ்ந்து போராட்டம் நடத்தினர்.

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த மூன்று விளம்பர பதாகைகளில் இருந்த முதல் மந்திரி யோகியின் படங்களை சிலர் சேதப்படுத்தி நீக்கி உள்ளனர்.

இந்த சம்பவம் வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சமூக விரோதிகள் இத்தகைய செயல்கள் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்