தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 1,268 தீர்ப்புகள் இன்று வெளியீடு
தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 1,268 தீர்ப்புகள் இன்று வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி,
தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து இருந்தார். மேலும் அதற்கான குழுவையும் அவர் நியமித்தார்.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி பேசுகையில், 'எலக்ட்ரானிக்ஸ் சுப்ரீம் கோர்ட்டு ரிப்போர்ட் (இ.எஸ்.சி.ஆர்.) திட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் 34 ஆயிரம் தீர்ப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. அவற்றில் இந்தியில் 1,091 தீர்ப்புகளும், ஒடியாவில் 21, மராத்தியில் 14, அசாமியில் 4, கரோவில் 1, கன்னடத்தில் 17, காசியில் 1, மலையாளத்தில் 29, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4, தமிழில் 52, தெலுங்கில் 28, உருதுவில் 3 என்ற எண்ணிக்கையில் தீர்ப்புகள் குடியரசு தினமான இன்று (வியாழக்கிழமை) மொழியாக்கம் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் தீர்ப்புகளின் மொழியாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார்.