"எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு... எதிர்காலத்தில் மோதலை உருவாக்கும்" - ராகுல் காந்தி
எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய எல்லைபகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்து இருந்தார். மேலும் சமீப காலமாக எல்லைப்பகுதிகளில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளையும், படைகளின் எண்ணிக்கையையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே சமயம் இந்தியாவும், எல்லைப்பகுதிகளில் படைகளின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. எந்த விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம், இந்தியாவிற்கு துரோகம் இழைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு தனது டுவிட்டர் பதிவில் அமெரிக்க அதிகாரி கூறிய கருத்துக்களையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.