சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றாக தயாராகிக்கொண்டிருக்கின்றன... போர் வந்தால் இரு நாட்டுடன் தான் - ராகுல்காந்தி

சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றாக தயாராகிக்கொண்டிருக்கின்றன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-25 15:48 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர்.

இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று 109-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை நேற்று டெல்லிக்குள் நுழைந்துள்ளது.

யாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி நேற்று மாலை உரையாற்றினார். பின்னர், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஓய்வு உள்பட சில காரணங்களுக்காக யாத்திரை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை ஒத்துவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளைக்கு பிறகு ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு படையின் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுடன் ராகுல்காந்தி இன்று உரையாடினார். இந்த உரையாடல் ராகுல்காந்தியின் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின் போது ராகுல்காந்தி பேசுகையில், சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றாக தயாராகிக்கொண்டிருக்கின்றன... போர் வந்தால் இரு நாட்டுடன் தான், அவ்வாறாயின் இது இந்தியாவுக்கு அதிக இழப்பாக இருக்கும். இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. நான் உங்கள் மீது (ராணுவம்) மரியாதை மட்டும் கொண்டிருக்கவில்லை, அன்பும் அரவணைப்பும் கொண்டுள்ளேன். நீங்கள் இந்த நாட்டை பாதுகாத்துள்ளீர்கள். நீங்கள் இல்லை என்றால் இந்த நாடு இருக்காது.

முன்னதாக நமக்கு சீனா, பாகிஸ்தான் என 2 எதிரிகள் இருந்தன. அந்த எதிரிகளுக்காக நாம் தனித்தனியே கொள்கைகளை வைத்திருந்தோம். முதலில் இரு பக்கங்களில் இருந்தும் போர் நடைபெறாது என்று கூறினர். பின்னர், பாகிஸ்தான், சீனா, பயங்கரவாதம் என இரண்டரை பக்கமும் போர் நடைபெறும் என மக்கள் கூறினர். தற்போது, ஒரு பக்க போர் தான் அது ஒன்றிணைந்துள்ள சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக தான். போர் ஏற்பட்டால் இரு நாடுகளுக்குடன் தான். சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ ரீதியில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் ஒன்றாக செயல்படுகின்றன' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்