மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

பீகாரில் இலவச சானிடரி நாப்கின் கேட்ட பள்ளி மாணவிகளிடம், ஆணுறைகளையும் இலவசமாக கேட்பீர்கள் என்று பெண் ஐஏஎஸ் அதிகாரி பேசினார்.

Update: 2022-09-30 02:12 GMT

பாட்னா,

பீகாரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவரிடம் மாணவிகள் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இருதினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாணவி ஒருவர், "எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது.அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா?" என்று கேட்டார்.

இதற்கு அதிகாரி ஹர்ஜோத் கவுர், "இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள்.

முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள்" இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் தொடர்ந்து பேசிய காட்சிகள் வெளிவந்துள்ளன.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் பும்ரா, பீகாரில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளார். இந்நிலையில் இத்தகைய சர்ச்சைக்குரிய அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன்பின்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், "எனது வார்த்தைகள் எந்த பெண்ணின் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் அவமானப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ விரும்பவில்லை" என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது, "இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதனை தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. 7 நட்களுக்குள் அவரிடமிருந்து உரிய விளக்கம் கேட்டுள்ளது.

பொருத்தமற்ற மற்றும் மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கடிதம் அனுப்பியுள்ளார்.

மாணவிகள் கேட்ட கேள்விக்கு ஐஏஎஸ் அதிகாரி டீன் ஏஜ் பெண்களிடம் தரக்குறைவான மற்றும் மிரட்டும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொறுப்பான பதவி வகிக்கும் ஒரு நபரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் இத்தகைய உணர்ச்சியற்ற அணுகுமுறை கண்டனத்திற்குரியது மற்றும் வெட்கக்கேடானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்