கர்நாடகத்தில் பாதுகாப்பு மையங்களில் இருந்து தப்பி ஓடிய 119 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை

கர்நாடகத்தில் பாதுகாப்பு மையங்களில் இருந்து தப்பி ஓடிய 119 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2022-08-03 21:23 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் பாதுகாப்பு மையங்களில் இருந்து தப்பி ஓடிய 119 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொதுநல மனு தாக்கல்

கர்நாடகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து தப்பி சென்ற குழந்தைகள் பற்றியும், அவர்களை கண்டுபிடிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கோலார் மாவட்டத்தை சேர்ந்த ராஜண்ணா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் ஆராதே மற்றும் நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின் போது மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகள் பற்றியும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

119 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை

அதன்படி, நேற்று முன்தினம் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐகோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து இதுவரை 484 குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 352 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 119 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போனவர்களில் 2 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளனர்.

கண்டுபிடிக்க முடியாமல் உள்ள 119 குழந்தைகளில், 66 பேர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். மற்ற 53 குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாகவும் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவாகி இருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட 352 குழந்தைகளில், 340 பேர் தங்களது பெற்றோரிடம் தற்போது வசித்து வருவதற்கான தகவல் கிடைத்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்